வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
பெரியபாளையம் அருகே தாராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை காவல் துறை மூலம் அப்புறப்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலரின் கண்டித்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,தாராட்சி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர் சிவகாமி செஞ்சுவேல் ஆவார். இந்நிலையில்,கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்த ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி கிராமசபை கூட்டத்தின் பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தின்போது சில இளைஞர்கள் கேள்வி கேட்டனர். மேலும்,கூட்டம் ஆரம்பித்த உடனேயே அங்கிருந்தவர்களிடம் கையொப்பம் பெற்றார்களாம். மேலும், கேள்வி கேட்ட இளைஞர்களை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசினாராம். மேலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காவல்துறையினர் மூலம் அந்த இளைஞர்களை கிராம சபை கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம்.
இந்நிலையில்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த ஊராட்சியில் உடனடியாக சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்த கோரியும் தாராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை செய்து வந்தனர்.
இந்நிலையில், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராட்சி கிளை செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்,வட்டச் செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கங்காதரன், கன்னியப்பன், பத்மா,வட்ட குழு உறுப்பினர்கள் அருள், வேலன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
முடிவில், கிளை செயலாளர் மஞ்சுளா வேலன் நன்றி கூறினார். இதன் பின்னர், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu