மின்சாரம் பாய்ந்து இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழப்பு.
கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியால் கூலி வேலைக்கு பைக்கில் சென்ற தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சின்னப்புலியூர் கிராமத்தைச் சார்ந்தவர் ரமேஷ்(48).அதே கிராமம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த ரமனய்யா (38), ஆகிய இருவர் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு தினந்தோறும் கிடைக்கின்ற கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று ரமேஷ் மற்றும் ரமனய்யா ஆகிய இருவரும் ரமேஷுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஏறி மணலி கிராமப் பகுதியில் கூலி வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். பைக்கை ரமேஷ் இயக்கினார். பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து கிடந்தது.
இதனை அறியாத இருவரும் மின்கம்பி மீது இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நிலை தடுமாறி பைக் கீழே விழுந்ததில் அருகில் இருந்த கம்பி உரச, கண்ணிமைக்கும் நொடியில் மின்சாரம் பாய்ந்து ரமேஷ் மற்றும்,ரமனய்யா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினக்கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில். கும்மிடிப்பூண்டி பல இடங்களில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் மற்றும் பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக ஒட்டு போட்டு காணப்படும் மின் கம்பிகள் அதிகம் காணப்படுவதாகவும் மாதாந்திர பராமரிப்பு பணி என்ற பெயரில் சில இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித பணிகளும் செய்வதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழிற்சாலைகள் நிறைந்த கும்மிடிப்பூண்டி பகுதியில் உயிர் அழுத்த மின் கம்பிகள் அதிக அளவில் இருப்பதாகவும், இதுபோன்று பழுதடைந்த மின் கம்பிகள் செல்லும் பாதையில் மழை, காற்று வரும்போதெல்லாம் சாலை நடுவே மின்கம்பிகள் அருந்து விழுந்து கிடந்த சம்பவங்கள் பலமுறை நடந்திருப்பதாகவும், அதிகாரிகள் அலட்சியப் போக்கின் காரணத்தினால் இதுபோன்று உயிரிழப்பு சம்பவம் நடந்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இவர்கள் மீது உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu