பேருந்தில் கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
உரிய ஆவணங்கள் இன்றி ஆம்னி பேருந்தில் கொண்டுவரப்பட்ட 14. கிலோ தங்க நகைகள் பறிமுதல் இது தொடர்பாக பிடிபட்ட இரண்டு பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை.
கும்மிடிப்பூண்டி அருகே ஏளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆம்னி பேருந்தில் கொண்டு வரப்பட்ட 14. கிலோ தங்க நகைகள் பறிமுதல் இது தொடர்பாக பிடிபட்ட இரண்டு பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி இயங்கி வருகிறது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும் தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இந்த சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா போதை பொருட்களை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பேருந்தை மடக்கி சோதனை செய்தனர். போதைப் பொருள் நுண்ணிறவு பிரிவு போலீசார் பயணிகள் கொண்டுவரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர் . அப்போது அங்கு மூன்று பைகளில் 14.கிலோ 500 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த பேருந்தில் பயணம் செய்த சேலம் மாவட்டம், அமரம்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன்(45) மற்றும் காளிமுத்து(43). ஆகியோர் கொண்டு வந்த தங்க நகைகள் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சேலத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியர்களாக வேலை செய்து வருவதாகவும். பல்வேறு பகுதிகளில் சென்று நகை கடைகளில் தங்கம் வாங்கிக் கொண்டு டிசைன் செய்து தரும் பணி செய்து வருவதாகவும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து தங்கம் வாங்கி டிசைன் காட்டி ஆர்டர் எடுத்துக் கொண்டு டிசைன் செய்வதற்காக கொண்டு செய்வதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
மேலும் போலீசார் இதற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றதா என்று விசாரணை செய்ததில் அதற்கான உரிய ஆவணம் இல்லை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவரையும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை வியாசர்பாடியில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து சரவணன், காளிமுத்து கொண்டு வந்த ரூபாய் 8 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து சென்னை வருமான வரித்துறை உதவி கமிஷனர் பாலச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். இது குறித்து இரண்டு பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu