தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகன் கடத்தல்; இருவர் கைது

தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகன் கடத்தல்; இருவர் கைது
X

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்.

ஆவடி அருகே தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகன் கடத்ப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி, கொள்ளுமேடு, காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணி (41). இவர், பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சேகர் (21). இதற்கிடையில், கடந்த 8ஆண்டுக்கு முன்பு, மணி வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக மதுரவாயல் சேர்ந்த சண்முகம் என்பவரிடம், ரூ.4லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

இதற்காக, மணி தொடர்ந்து வட்டி கட்டி வந்துள்ளார். மேலும், கடந்த இரு வருடமாக மணி வட்டியை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது.



இதற்கிடையில், சமீபத்தில் சண்முகம் கொடுத்த கடனை பல மடங்கு வட்டியுடன் திரும்ப கேட்டுள்ளார். மேலும், மணி விரைவில் வாங்கிய கடனை மட்டுமே திரும்ப தருவதாக கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் , கடந்த 27ந்தேதி அதிகாலை சண்முகம் அடியாட்களுடன் மணி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர்கள் மணி இல்லாததால், அவரது மகன் சேகரை வீட்டிலிருந்து கடத்தி சென்றுள்ளனர்.

மேலும், அவர்கள் போகும் போது கடனுடன் வட்டி பணத்தை கொடுத்துவிட்டு, சேகரை அழைத்து செல்லுமாறு வீட்டில் இருந்தவர்களிடம் கூறி சென்றுள்ளனர்.

பின்னர், மணி சண்முகத்தை சந்தித்து ரூ.2லட்சம் பணத்தை கொடுத்து விட்டு, சேகரை மீட்டு வந்துள்ளார். அப்போது, சேகரை கந்து வட்டி கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு, மணி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கு, போலீஸ் தரப்பில் சரியான நடவடிக்கை இல்லை. இதனையடுத்து மணி, தனது மகன் சேகருடன் சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்த 28ந்தேதி சென்றார்.

பின்னர், அங்கு, மணி, தனது மகனுடன் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த, அங்கிருந்த காவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் பிறகு, உயர் அதிகாரிகள் மணியிடம், "உங்கள் புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்" என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர், சேகரை கடத்தி சென்ற கந்து வட்டி கும்பலை சேர்ந்த ஆவடி, பருத்திப்பட்டை சேர்ந்த பாஸ்கர் (33), நெற்குன்றம் ஏரிக்கரை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான கந்து வட்டிக்காரர் மதுரவாயிலை சேர்ந்த சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!