போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..! 2 பேர் கைது..!
கார்ட்டூன் படம் செய்திக்கான மாதிரி படம்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை கணபதி நகர் பகுதியில் அபினேஷ் ( வயது 25), விஷ்ணு ( வயது 22) மற்றும் முத்து ஆகிய மூன்று வாலிபர்கள் வசித்து வருகின்றனர். ஏசி மெக்கானிக்கான மூன்று பேரும் அவ்வப்போது மது மற்றும் கஞ்சா போதையில் தாங்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் அமர்ந்து தகராறு செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மூன்று பேரும் ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பெண்களை தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி (38) என்ற பெண் மூவரையும் கண்டித்துள்ளார். மூவரும் சீதாலட்சுமி அவரது மகன் கமலேஷ் (17) ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்களது அறையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்திகளை எடுத்து வந்த 3 பேரும் சீதாலட்சுமி மற்றும் அவரது மகன் கமலேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் இருவருக்கும் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்தை வெட்டுக்காயம் விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரலேகா (40) மற்றும் அவரது மகன் விஜய் (20) இருவரும் அவர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது மூவரும் இணைந்து சந்திரலேகா மற்றும் அவரது மகன் அஜயையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். மேலும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேஷ் (18) என்ற மாணவன், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மற்றும் அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஒட்டி உட்பட 12 பேரை வெட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாசிகள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போதையில் சுற்றித்திரிந்த அபினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள முத்துவை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், அபினேஷ், விஷ்ணு, முத்து ஆகிய மூன்று வாலிபர்களும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இங்கு வாடகைக்கு வந்ததாகவும், அவர்கள் வந்ததிலிருந்தே மது மற்றும் கஞ்சா போதையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் அருகே உள்ள வீட்டில் வசிக்கும் பெண்களை தரக்குறைவாக பேசி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தப் பகுதியில் மது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனால் இப்பகுதிவாசிகள் இன்னலுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu