மின்சாரம் வழங்கக்கோரி ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் சாலை மறியல்
மின்சாரம் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பாளர்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 40. மற்றும் 41.வது வார்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இரண்டு தினங்களாக பெய்த கனமழையும், மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மூன்று நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை மின்சாரம் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆவடி-பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஆவடி-பூந்தமல்லி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகவே கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் பொதுமக்களிடையே தெரிவிக்கையில், கனமழை மற்றும் புழல் காற்று பலமாக வீசியதால் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் உடைந்து கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. இதில் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் அலட்சியம் செய்கிறார்கள். மின்சாரம் இல்லாத காரணத்தினால் குடிநீர் வழங்கப்படவில்லை. பணம் கொடுத்து அதிக விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் பல்வேறு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படுகிறார்கள். மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தாலும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும், இதே நிலைமை மீண்டும் நீடித்தால் பெரிய அளவில் போராட்டம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu