ராசிபுரம் நகர்மன்ற பெண் உறுப்பினர் பணமோசடியில் கைது..!
நாமக்கல் குற்றவியல் போலீசாரால் கைதுசெய்யப்பட்ட சசிரேகா.
ராசிபுரம்:
ராசிபுரம் நகர்மன்ற சுயேச்சை பெண் உறுப்பினர் சசிரேகா சதீஸ்குமார் பண மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம் நகர்மன்றத்தின் 12வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் சசிரேகா சதீஸ்குமார் (33). இவர் கடந்த நகர்மன்றத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றவர் ஆவார்.
இந்நிலையில், நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, கணவர் சதீஷ்குமார், அவரது மாமனார் வெங்கடாஜலம், ஆகிய மூன்று பேர் மீதும் பண மோசடி, செக்மோசடி, பண இரட்டிப்பு, வெளிநாட்டு கார்கள் வாங்கித்தருவது என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பலரிடம் பல கோடி பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூர் திமுக செயலாளராக உள்ள சி.செல்லவேல் (43) என்பவரிடம் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஆடி, கியா உள்ளிட்ட கார்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.50 கோடி பணம் பெற்றுள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் நீண்டநாட்களாகியும் கார் இறக்குமதி செய்து வாங்கித் தராததால், செல்லவேல் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று இழுத்தடித்து வந்த சதீஸ்குமார், பின்னர் செக் ஒன்றைக் கொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் செக், பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதனால் செல்லவேல் சதீஸ்குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் பணம் திரும்பக் கிடைக்காததால் செல்லவேல் நாமக்கல் குற்றவியல் காவல் துறையிடம் புகார் அளித்தார். இதுகுறித்து நாமக்கல் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, அவரது கணவர் மற்றும் அவரது மாமனார் ஆகிய 3 போரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் ராசிபுரம் நகர்மன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது.அந்த கூட்டத்திற்கு வந்திருந்த சசிரேகா சதீஸ்குமாரை குற்றப்பிரிவு காவல்துறையினர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர்.
மேலும் மாமனார் வெங்கடாஜலம், கணவர் சதீஸ்குமார் ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வருவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல் அழைத்துச் செல்லப்பட்ட சசிரேகாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu