சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி துவக்கம்
சேந்தமங்கலத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். அருகில் அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள ஜங்களாபுரத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி துவக்க விழாவிற்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரயோசிங் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து 400 காளைகளும் , 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்ட பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து காளைகள் வெளியே செல்லாமல் தடுக்கப்பட்டன. மாடு பிடி வீரர்கள் காயம் படாமல் இருப்பதற்காக மைதானத்திற்குள் தேங்காய் நார்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து போட்டிக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டியின் விதிமுறைகளின்படி முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து வாடிவாசல் வழியாக வந்த ஜல்லிக்கட்டு காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில், சோபா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியினை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu