ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா...
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன் படம் திறக்கபட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுரியில் மறைந்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், கல்லூரி முதல்வர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்லிமெண்ட் நிலைக்குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அன்பழகனின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது:
மறைந்த திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடும்படி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கல்லூரியில் நான் பேசி உள்ளேன். இந்தக் கல்லூரியில் படித்தவர்கள் பலர் கல்வியில் உயர்ந்து மிகப்பெரிய அளவில் சாதனைபுரிந்து உள்ளனர். இது மிகவும் பெருமையாக உள்ளது.
இன்றையதினம் இந்தக் கல்லூரியில் பேராசிரியர் அன்பழகனின் உருவப் படத்தை திறந்து வைப்பது எதனால் என்றால், இந்தக் கல்லூரி 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.1967 ஆம் ஆண்டு திருசெங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேராசிரியர் அன்பழகனின் முயற்சியினால், அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, இந்தக் கல்லூரி துவக்கப்பட்டது.
தமிழ் இனத்தில் வாழ்கின்ற இளைஞர்களுக்கு பேராசிரியர் ஓர் முன்னோடியாக வாழ்ந்து காட்டினார். வாழ்க்கையில் உயர கல்வி ஒன்றே ஆயுதம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். சரியாக சொன்னால் வேறு எந்த உயிரினத்திற்கும் தன் உணர்வுகளை வெளிப்படுத்த மொழி கிடையாது. ஆனால், மனித இனத்திற்கு மட்டுமே தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிற மொழி உள்ளது. இதை எதற்காக சொல்கின்றேன் என்றால் தமிழ்மொழியை காப்பதற்கும், தமிழ்மொழியை மேம்படுத்துவற்கும் கடைசிநாள் வரை குரல் கொடுத்தவர் பேராசிரியர் அன்பழகன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உங்களின் எதிர்கால கனவை நீங்கள் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் இலக்கை நோக்கி இருக்க வேண்டும். உலகஅளவில் தமிழர்கள் தான் மிகப் பெரிய பொறுப்பில் உள்ளனர். எனவே இளைய தலைமுறையினராகிய நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வர கடுமையாக உழைக்க வேண்டும் என திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
முன்னதாக திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்தினர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu