இலவச பஸ் வசதி மூலம் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி: அமைச்சர் பெருமிதம்..!

ராசிபுரம் அருகே நடைபெற்ற விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 10 வழித்தடங்களில், புதிய அரசு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எம்.பி. ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.
இலவச பஸ் வசதி மூலம் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி: போக்குவரத்து அமைச்சர் பெருமிதம்
நாமக்கல் :
தமிழகத்தில் இலவச பஸ் வசதி மூலம் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூராட்சி, ஆட்டையாம்பட்டி பிரிவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இணைந்து, ரூ. 1.51 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழாவில் கலந்துகொண்டு புதிய பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தார். பின்னர், பணியின் போது உயிரிழந்த 25 போக்குரவத்து கழக பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தவுகளை வழங்கி வழங்கி, புதிய 7 புறநகர் மற்றும் 3 புதிய டவுன் பஸ்கள் என மொத்தம் 10 புதிய பஸ்களை பல்வேறு வழித்தடங்களுக்கு கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக முதலமைச்சர், பொதுமக்களின் வசதிக்காக, போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகின்றார். பழைய பஸ்களுக்கு பதிலாக சுமார் 7,500 புதிய பஸ்கள் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் 1,000 பழைய பஸ்கள் மாற்றப்பட்டு புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியின் போது உயிரிழந்த, போக்குவரத்து கழக பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 16 டிரைவர்கள், 72 கண்டக்டர்கள், 2 தொழில்நுட்ப பணியாளர்கள் என 90 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 1 டிரைவர், 24 கண்டக்டர் என மொத்தம் 25 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 கண்டக்டர்கள் பணி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் முதல் சென்னை - 2 பஸ்கள், நாமக்கல் -சேலம் -மதுரை 1 பஸ், நாமக்கல் - கோயமுத்தூர் 1 பஸ், ராசிபுரம் - சேலம் - பெங்களூர் 1 பஸ், திருச்செங்கோடு - சேலம் - சென்னை 1 பஸ் என 7 புதிய புறநகர் பஸ்களும், நாமக்கல் - காரவள்ளி 1 பஸ், நாமக்கல் - மோகனூர் 1 பஸ் மற்றும் திருச்செங்கோடு - குமாரபாளையம் 1 பஸ் என 3 புதிய டவுன் பஸ்கள் என மொத்தம் 10 புதிய பஸ்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறை லாப நோக்கம் அற்ற சேவை துறை ஆகும். அந்த வகையில் மகளிருக்கு இலவச பஸ் பயணத்தை முதலமைச்சர் அறிவித்தார். அதற்கான தொகையை முதலமைச்சரே ஒதுக்கீடு செய்து வருகின்றார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறைக்கு ரூ.1,500 கோடியும், தற்போது ரூ.2,500 கோடியும் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 814 சாதாரண கட்டண டவுன் பஸ்களில் 10,33,985 மொத்த பயணங்களில், மகளிருக்கான கட்டணமில்லா பயண சேவை மூலம் சுமார் 7,18,535 மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
இது சுமார் 69 சதவிகிதம் ஆகும். மேலும் 28 மலைப்பிரதேச பஸ்களில் 17,793 மொத்த பயணங்களில் சுமார் 7,562 மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளார்கள். தற்போது 18 சதவிகிதம் மகளிர் இலவச பஸ் வசதியை பயன்படுத்தி வருவதால் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மகளிருக்கு இலவச பஸ் பயணத்திட்டத்தில், தமிழ்நாட்டில் சுமார் 510.55 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் 60.34 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் தமிழ்நாட்டில் 75.44 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் துரைசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு துரைசாமி, அத்தனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் சின்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (சேலம்) நிர்வாக இயக்குநர் பொன்முடி, பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu