பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெற டிஏபி கரைசல் தெளிக்க வேண்டுகோள்

பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெற  டிஏபி கரைசல் தெளிக்க வேண்டுகோள்
X

டிஏபி கரைசல் தெளிக்கும் விவசாயி (கோப்பு படம்).

பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெற டிஏபி கரைசல் தெளிக்க வேளாண்துறை பரிந்துரை செய்துள்ளது.

பயறு வகைப்பயிர்களில் மகசூல் டி.ஏ.பி கரைசல் பயன்படுத்தினால் 25 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொ) கவிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில், பயறு வகைகள் பயிர்கள் சில இடங்களில் வளர்ச்சி நிலையிலும், சில இடங்களில் பூக்கும் தருவாயிலும் உள்ளது. பயறு வகை பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும் தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி, உயிர் உர பயன்பாடு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரமிடுதல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு போன்றவற்றை கடைபிடிக்காத நிலையில், குறைந்த மகசூல் கிடைப்பதால், விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் போய்விடுகிறது.

குறிப்பாக பயறு வகை பயிர்களில் பூக்கும் பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய தொழில் நுட்பமான டி.ஏ.பி., கரைசல் தெளிப்பதை கடைபிடித்தாலே அதிக மகசூல் பெற முடியும். பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி., கரைசல் தெளிப்பதால் இலை வழியாக தழை மற்றும் மணி சத்துகள் கிரகிக்கப்படுகிறது. இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதுடன் பூக்கள் உதிர்வதும் வெகுவாக குறைக்கப்படுகிறது. இதனால் அதிக காய்கள் பிடிப்பதோடு திரட்சியான விதைகள் உருவாகின்றது. இதன் மூலம் மகசூல் அதிகரிக்கப் படுகிறது.

ஒரு ஏக்கருக்கு 5 கிலோ டி.ஏ.பி., உரத்தை, 10 லிட்டர் நீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து தேவையான அளவு நீரில் கலந்து கைத்தெளிப்பானால் செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். பூ பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும், பிறகு 15 நாட்கள் கழித்து மறுமுறையும் ஆக இரு முறை தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை வேளையில் தான் டி.ஏ.பி. கரைசலை தெளிக்க வேண்டும். டி.ஏ.பி., கரைசல் தெளிக்கும் பொழுது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பயறுவகை பயிர்களில் 25 சதவீதம் வரை மகசூல் பெருகும். அனைத்து விவசாயிகளும் தவறாது டி.ஏ.பி., கரைசல் தெளித்து அதிக மகசூல் பெற்று பயன் அடையவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture