திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி  நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

திருச்செங்கோடு அருகே வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும், தனியார் மகளிர் கல்லூரி (பைல் படம்)

திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

திருச்செங்கோடு அருகே அமைந்துள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள எளையாம்பாளையத்தில், பிரபல தனியார் மகளிர் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் மருத்துவக் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் 18க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை உள்ளடக்கிய மகளிர் கல்லூரி நிறுவனமான இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதையொட்டி, இன்று காலையில் சேலம் மற்றும் கோவை மண்டலங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென திருச்செங்கோடு தனியார் கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்தனர். வருமான வரித்துறையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அட்மிஷன் ஆபீஸ், மருத்துவக் கல்லூரி அட்மிஷன் ஆபீஸ் உள்ளிட்ட அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் திருச்செங்கோடு அருகே சிறு மொளசியில் உள்ள கல்லூரி தாளாளர் கருணாநிதி இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப். 19ம் நடைபெற்ற, லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மெசின்கள், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 4ம் தேதி இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில்தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதே கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story