சாலை ஓரங்களில் ஆடு, கோழிகளை வெட்டினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.
ஆடு, கோழிகளை இறைச்சிக்காக வெட்டுபவர்கள், சாலை ஓரங்களில் வெட்டினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
விலங்குகளை வதை செய்யும் கூடம் இருந்தும் சாலையோரங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விலங்குகள் வதை செய்யப்படுகின்றன. அவ்வாறு விலங்குகளை வதை செய்துவிட்டு சாலையோரங்களில் அதன் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால் தெரு நாய்கள் அதை உண்பதற்காக கூட்டம் கூட்டமாக கூடி சண்டையிட்டு சாலையில் அங்கும் இங்கும் ஓடுகின்றன. இதனால் சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாவதுடன், பொதுமக்களை நாய்கள் கடிக்கின்றன. எனவே அந்தந்த நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துக்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் விலங்குகளை வதை செய்ய வேண்டும்.
இதை மீறி சாலையோரங்களில் கோழி, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வதை செய்யும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்களைக் கொண்டு, மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மூலம் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும்.
விலங்குகளை வாகனத்தில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது, விலங்குகள் போக்குவரத்து சட்ட விதிகளுக்கு மாறாக கொண்டு செல்வதாக புகார்கள் வந்துள்ளது. எனவே விலங்குகளை வாகனத்தில் கொண்டு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
வாகனத்தில் விலங்குகள் பயணிக்கும் போது 6 செ. மீ உயர்த்திற்கு குறையாமல், வைக்கோல் அல்லது தேங்காய் நார் வாகனத்தில் பரப்பி விடவேண்டும். இரண்டு விலங்குகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு வாகனத்தில் ஏற்ற வேண்டும். விலங்குகளுக்கு தேவையான முதலுதவி மருந்துப் பெட்டி வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.
விலங்குகளை வாகனத்தில் ஏற்றும் முன் அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரிடம், விலங்குகள் வாகனத்தில் பயணிக்க உடல் தகுதியாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்து சான்று பெற வேண்டும். விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது வாகன டிரைவர்கள் விலங்குகளை ஏற்றும் இடம், நேரம் மற்றும் இறக்கும் இடம் ( உத்தேசமான நேரம் ) ஆகியவற்றை குறித்து வைத்திருக்க வேண்டும். 6 மணி நேரத்திற்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் இடைவேளியில் நிறுத்தி, விலங்குகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் அளித்து பயணிக்க வேண்டும்.
வாகனத்தில் வாகனங்களுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் விலங்குகள் போக்குவரத்து சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகள் வதை செய்வது சம்மந்தமாக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள், மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க உதவி ஆய்வாளர் தர்மராஜனை, 9786053567 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu