மாநில சிறுபான்மை ஆணையக்குழு 27ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா.
நாமக்கல் மாவட்டத்தில், வருகிற 27ம் தேதி, மாநில சிறுபான்மை ஆணையக் குழுவினர் வருகை தந்து, சிறுபான்மை இன மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகின்றனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண், துணைத்தலைவர் அப்துல் குத்தூஸ், ஆணையக்குழு உறுப்பினர் செயலர் சம்பத் மற்றும் உறுப்பினர்கள் வருகின்ற 27ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்து பேச உள்ளனர். மேலும், சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.
எனவே, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் அனைவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழுவினரை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu