நேரு பிறந்த தினத்தையொட்டி நவ.,13ல் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் வரும் 13ம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, நவம்பர் 13ம் தேதி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5000, 2ம் பரிசாக ரூ. 3000, 3ம் பரிசாக ரூ. 2000 வீதம் வழங்கப்பட உள்ளது.
பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வழங்கப்படும்.
இந்தியாவின் விடிவெள்ளி ஜவகர்லால் நேரு, குழந்தைகளை விரும்பிய குணசீலர், பஞ்சசீலக் கொள்கை போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
பள்ளி மாணவ, மாணவியர் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04286-292164 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu