நாமக்கல் மாவட்டத்தில் சிறு தானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா..!
கோப்பு படம்
நாமக்கல் மாவட்டத்தில் சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: கலெக்டர் அழைப்பு
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் நடைபெறும் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொள்ளலாம்.
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள். வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள். பாலுட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர் குறிப்பாக ரத்தசோகையினால் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் ( FNHW) மூலம், ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள் 3 நிலைகளில் நடத்தப்பட உள்ளது.
வருகிற 9ம் தேதி முதல் 12 தேதி வரை மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களிலும், பஞ்சாயத்து அளவிலான போட்டிகள் நடைபெறும். 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 15 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றிய அளவிலான போட்டிகள் நடைபெறும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வரும் 25ம் தேதி நடைபெறும்.
சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்துவதன் மூலம் கிராமப்பறங்களில் உள்ள அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நிலையான ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டே சரிவிகித உணவை பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்கேற்புடன் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பதிவு செய்துகொண்டு பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu