ரூ. 4 ஆயிரம் லஞ்சம்! வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை!

ரூ. 4 ஆயிரம் லஞ்சம்! வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை!
X

பைல் படம் : லாரியில் மூங்கில் ஏற்றிச்செல்ல ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

லாரியில் மூங்கில் ஏற்றிச்செல்ல ரூ. 4 ஆயிரம் லஞ்சம்! வனத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், ஜன. 30-

லாரியில் மூங்கில் மரம் ஏற்றிச்செல்ல அனுமதிப்பதற்காக, ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரிக்கு, நாமக்கல் கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகில் உள்ள ஈச்சவாரியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ராஜா, விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மூங்கில் மரங்களை வளர்த்து வந்தார். அந்த மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்வதற்காக, மூங்கில் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அனுமதி வேண்டி, சேந்தமங்கலம் வனத்துறை வனவர் வரதராஜன் மற்றும் நடுக்கோம்பை வனக்காவலர் காசிமணி ஆகியோரிடம் மனு அளித்தார். அனுமதி அளிப்தற்கு, அவர்கள் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ராஜா, இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கூறிய ஆலோசனையின் பேரில், கடந்த 2005ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி, ராஜா வனவர் வரதராஜன் மற்றும் வனக்காவலர் காசிமணி ஆயோரை சந்தித்து லஞ்சம் ரூ. 4 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இது சம்மந்தமாக நாமக்கல் சிஜேஎம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த, வழக்கு விசாரணை முடிவுற்று இன்று 30ம் தேதி, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற சிறப்பு நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் லஞ்சம் வாங்கிய வனவர் வரதராஜன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, ஒரு பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபதராதம் கட்டத் தவறினால் 3 மாதங்கள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் மற்றொரு பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டு, அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. வனவர் வரதராஜன் இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், மொத்த அபராதமாக ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மற்றொரு குற்றவாளியான வன காவலர் காசிமணி, வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings