தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.200 கோடி மதிப்பில் கறிக்கோழிகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.200 கோடி மதிப்பில் கறிக்கோழிகள் விற்பனை
X
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 2 நாட்களில், 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. இதன் மூலம் ரூ. 200 கோடி மதிப்பில் கறிக்கோழி வியாபாரம் நடைபெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 2 நாட்களில், 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. இதன் மூலம் ரூ. 200 கோடி மதிப்பில் கறிக்கோழி வியாபாரம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் பல்லடம், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழிக்கான பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுகிறது. உற்பத்தி குறைந்து நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கை.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி, ஒரு கிலோ ரூ. 107க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, 10ம் தேதி ரூ. 114 ரூபாய், 15ம் தேதி ரூ. 124 என, படிப்படியாக உயர்ந்தது. அதையடுத்து, 15ம் தேதி ரூ. 109, 28ம் தேதி ரூ. 111 என நிர்ணயிக்கப்பட்டது. 30ம் தேதி ரூ. 2 அதிகரித்து, ஒரு கிலோ உயிருடன் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 113 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 2 நாட்கள் விறுவிறுப்பாக கறிக்கோழி விற்பனை நடைபெற்றது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ. 800க்கும், நாட்டுக்கோழி ரூ. 750க்கும் விற்பனையான நிலையில், பிராய்லர் கோழிக்கறி ஒரு கிலோ ரூ. 220க்கு விற்பனை செய்யப்பட்டதால், அசைவ பிரியர்கள் பலரும் கறிக்கோழியை விரும்பி வாங்கிச் சென்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

பிராய்லர் கறிக்கோழியை பொறுத்தவரை, ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ. 95 ரூபாய் செலவாகிறது. தற்போது, கொள்முதல் விலை ரூ. 113 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொள்முதல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓரளவுதான் உயர்ந்துள்ளது. வழக்கமாக வாரம் தோறும், தமிழகத்தில் 2.50 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தீபாவளி பண்டிகை அன்றும், அதற்கு மறு நாளும் என 2 நாளில் மட்டும், தமிழகத்தில் 2 காடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. அதன் மூலம், ரூ. 200 கோடி மதிப்பில் கறிக்கோழி வியாபாரம் நடைபெற்றுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!