திருச்செங்கோட்டில் சிறுமியை கத்தியால் குத்திய நபரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

Namakkal News-திருச்செங்கோட்டில் சிறுமியை கத்தியால் குத்திய நபரைக் கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களது உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
Namakkal News, Namakkal News Today- திருச்செங்கோட்டில் சிறுமி உட்பட 3 பேரை கத்தியால் குத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி, மெயின் ரோட்டில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்செங்கோடு அடுத்த சக்திநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு அருகே வசிக்கும் 10 வயது சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் தடுக்க முற்பட்டனர். எனினும், அவர்களையும் செந்தில்குமார் கத்தியால் குத்தியுள்ளார். தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் செந்தில்குமாரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். மேலும், காயமடைந்த சிறுமி உள்ளிட்ட மூவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனிடையே சிறுமி உள்ளிட்ட 3 பேரை கத்தியால் குத்திய செந்தில்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஏற்க மறுத்து இன்று காலை நாமக்கல் & -திருச்செங்கோடு ரோட்டில் குமரமங்கலம்-சத்திநாயக்கன்பாளையம் பிரிவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் நாமக்கல் & -திருச்செங்கோடு ரோட்டில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விரைந்து வந்த திருச்செங்கோடு போலீஸ் டிஎஸ்பி இமயவரம்பன், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமியிடம் செந்தில்குமார் தவறாக நடக்க முற்பட்டார். இதை தனது பெற்றோரிடம் கூறுவதாக சிறுமி தெரிவித்தால் அவரின் கழுத்தை செந்தில்குமார் அறுத்துள்ளார். இதை மறைக்க அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறுகின்றனர். போலீசாரும் அதற்கு உடந்தையாக உள்ளதாக கிராம மக்கள் புகார் எழுப்பினர். மேலும், செந்தில்குமாரை கைது செய்யும் வரை மறியல் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர். அவர்களை சமரசம் செய்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுயளித்தனர்.
இதையடுத்து 2 மணி நேரத்திற்குப்பின் பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் வாகனப் போக்குவரத்தை போலீலீசார் சீர் செய்தனர். சாலை மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu