நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

காவிரி வெள்ளத்தால் பள்ளிபாளையம் பகுதியில், தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் உணவு வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 900க்கும் மேற்பட்டோர், 9 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருமான ஆசியா மரியம், மாவட்ட கலெக்டர் உமா, ஈரோடு எம்.பி. பிரகாஷ், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில், மேட்டூர் அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் கூறியதாவது:-
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் சுமார் 1.70 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதையொட்டி, அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிகள், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சுமார் 308 வீடுகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அனைத்து இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 9 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு 5 மாத கர்ப்பணியும் பாதுகாப்பாக அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியில் பொதுமக்கள், இளைஞர்கள் செல்ல இயலாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமாரபாளையத்தில் உள்ள தரைபாலத்தில் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை காவிரி வெள்ளத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காடச்சநல்லூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 150 பயனாளிகளுக்கு இடம் அடையாளம் காணப்பட்டு விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளது. ஆசியா வளர்ச்சி வங்கி மூலம் 585 குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளில் தங்குவதற்கு 380 பயனாளிகள் சம்மந்தம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீயணைப்பு துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், குமாரபாளையம் நகராட்சி, ஜே.கே.கே நடராஜா திருமண மண்டபம், ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபம், ஸ்ரீ அய்யப்ப சேவா மண்டபம் உள்ளிட்ட நிவாரண முகாம்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபம் மற்றும் செங்குந்தர் திருமண மண்படம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு உணவு, நிவாரண பொருட்கள் ஆகியவை வழங்கப்படுவது குறித்தும் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்தும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வுகளில் நகராட்சித் தலைவர்கள் விஜய்கண்ணன் (குமாரபாளையம்), செல்வராஜ் (பள்ளிபாளையம்), திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu