ராசிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி மனு

ராசிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி மனு
X

ராசிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக உள்ளது.

ராசிபுரத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும்பணியை நிறுத்த வேண்டும் என நாமக்கல் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் ஏரிப்பகுதியில் நடைபெற்று வரும், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப்பணி, ஏரிக்கு தண்ணீர் வரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் ஆனைப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும் என சசிகலா அணியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட சசிகலா அணி பொறுப்பாளர் கோபால், ராசிபுரம் நகர பொறுப்பாளர் வேலுசாமி ஆகியோர் இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனுவில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை, ராசிபுரத்தில் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, ராசிபுரம் அருகில் உள்ள அணைப்பாளையம் ஏரிப்பகுதியில், அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அணைப்பாளையம் ஏரியின் மண் சுண்ணாம்புக்கல் கொண்ட மண். அந்த மண்ணில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவது மிகவும் ஆபத்தானது. மேலும் ஏரி என்பது அந்த பகுதிக்கு மிகவும் முக்கியம், மழைக் காலங்களில் ஏரியில் நிரம்பும் தண்ணீரால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பொதுமக்களின் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர்மட்டம் உயரும். இதனால் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஏரி அழிக்கப்பட்டால் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் அங்கு மருத்துவமனை கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. தற்போது பெய்துள்ள மழையால் அங்கு மழைநீர் தேங்கி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு அணைப்பாளையம் ஏரிப்பகுதியில் அரசு மருத்துவமனை கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தி, அங்கு மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து, தற்போது இயங்கி வரும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story