மத்திய அரசின் நிதி உதவி கிடைத்தவுடன் பொது சுத்திகரிப்பு நிலையம்: அமைச்சர் தகவல்
Namakkal News-நாமக்கல் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்ட, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அங்கு மரக்கன்றுகளை நட்டார். அருகில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர்.
Namakkal News, Namakkal News Today- மத்திய அரசின் நிதி உதவி கிடைத்தவுடன், பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கோழிப் பண்ணை தொழில் வளர்ச்சி குறித்து பண்ணையாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நாமக்கல் புதிய பஸ் நிலையம் மற்றும் ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை விநியோகம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசு நிதியுடன் பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பொது சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு இடம் கண்டறியப்பட்டு, கட்டுமான அனுமதி வழங்கப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய ஜல்சக்தி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிசுத்துடன் இணைந்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் 75 சதவீதம் மத்திய அரசு நிதியும், 25 சதவீதம் மாநில நிதியும் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின் நிதி கிடைத்தவுடன் அந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளில், தமிழகத்தில் 25 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 33 சதவீதமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்காக இந்த ஆண்டு 10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்காக தமிழக முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். அதேபோல் நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கழிவு நீரை முழுமையாக சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளோம். ஒட்டுமொத்த தமிழகத்தில் நீர், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu