தமிழகத்தில் தகுதியான அனைத்து விவசாயிகளும் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறவில்லை; மத்திய இணை அமைச்சர் கவலை

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் விவசாயி ஒருவருக்கு, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மருந்து தெளிக்கும் ட்ரோன் கருவியை மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வழங்கினார்.
Namakkal news, Namakkal news today- பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் தகுதியான விவசாயிகள் அனைவரும் பயன்பெறவில்லை. அவர்களின் பெயர்களை சேர்க்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் கூறினார்.
நாமக்கல்லில் பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 17வது தவனை நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு மற்றும் சிறு-குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின், 17வது தவணையின் கீழ், நாடு முழுவதும் 9 கோடியே 26 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ. 20,000 கோடி பணபரிமாற்றத்தை, ஒரே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். மேலும், இப்கோ மூலம் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்காக ‘நமோ ட்ரோன் திதி’ சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்மூலம் பெண்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விவசாய தோட்டங்களுக்கு மருந்து தெளிக்கும் ட்ரோன் கருவிகள் வழங்கப்படுகிறது. மகளிரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நாடு முழுவதும் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
பெண்களின் சக்தி மகத்தானது என்பதை உணர்ந்து மத்திய அரசு அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசத்தின் ஒவ்வொரு விவசாயியின் வளர்ச்சிக்காகவும், பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வேளாண் தொழில்களுக்கும் தனித்தனி திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை பிரதம மந்திரி விவசாய நிதி திட்டம் தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு, அவர்கள் தங்களுடைய பெயரை இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வருமான வரி செலுத்தாத விவசாயிகள் அனைவரும், இத் திட்டத்தில் பயன்பெற முடியும். தமிழகத்தில் தகுதியான அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இதுவரை பயன்பெறவில்லை. தமிழக அரசு தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தில் பயன் பெற, அவர்களின் பெயர்களை இச்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu