நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: குளுகுளு கிளைமேட்
தமிழகத்தில், கடந்த 1 மாதமாக, வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதுடன், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, சிறுவர் முதல், முதியவர்கள் வரை, அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை அதிக பட்சமாக, 104 டிகிரி வெப்பம் வாட்டியது.
இந்நிலையில், நேற்று மதியம் வெய்யிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. அதனால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மாலை 4 மணிக்கு மேல் பல இடங்களில் கோடை மழை பெய்யத்துவங்கியது. வள்ளிபுரம், கீரம்பூர், பரமத்தி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், ராசிபுரம், மோகனூர், எஸ். வாழவந்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதியில் மாலை நேரத்தில் கனமழை பெய்தது.
நாமக்கல் நகரில் இரவு 8 மணிக்கு கனமழை பெய்தது. இரவு முழுவதும் லேசான தூறல் இருந்ததால், வெப்பம் குறைந்து ஜில் கிளைமேட் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மோகனூர்–ப.வேலூரில் ரோட்டில், வள்ளியம்மன் கோவில் அருகில், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நின்றதால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் பெய்த மழையால் விவசாயிகள் கோடை உழவு பணிகளை துவக்க உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu