கல்வி களப்பயணம்: நாமக்கல் மாவட்டத்தில் 940 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு, களப்பயணம் மேற்கொண்ட அரசு பள்ளி மாணவிகளுடன், கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்துரையாடினார்.
தமிழக அரசால், துவக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், அருகில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி களப்பயணம் அழைத்து செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள, 98 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 940 மாணவ, மாணவிகள், கல்வி களப்பயணத்துக்கு, 10 கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இக்கல்வி பயண நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு, உயர்கல்வி குறித்த தகவல்கள் கல்லூரி பேராசிரியர்களால் விளக்கி கூறப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரிகளில் உள்ள அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் லேப் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். பள்ளி மாணவ, மாணவியருக்கு, உயர்கல்வி பயிலுதல் தொடர்பான ஆர்வத்தை உருவாக்குவதற்காக, இக்கல்வி களப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற களப்பயணத்தில், பேராசிரியர்கள், ரத்த வகைகள், அவற்றை கண்டறியும் முறைகள் குறித்து விளக்கினர். பள்ளி மாணவ, மாணவியர் மேற்கொண்ட களப்பயணத்தை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, களப்பயணம் மூலம் பெற்ற அனுபவங்களை கேட்டறிந்தார்.
அரசு மருத்துக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பயணத்தில் பங்கேற்றனர்.
அதேபோல், நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரி, ப.வேலூர் கந்தசாமி கண்டர் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு, களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu