நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நுகர்வோருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ.55 ஆயிரத்துக்கான காசோலையை நீதிபதி டாக்டர் ராமராஜ் வழங்கினார்.
நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற, விசாரணையில் இழப்பீடு வழங்கக்கோரி உத்தரவிடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இவ்வாறு வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு பணம் செலுத்தாமல் உள்ள 200க்கும் மேற்பட்டவர்களுக்காக, வருகிற 15ம் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பணம் செலுத்தாததால் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களும், மேல்முறையீடு செய்தவர்களும் சமரச பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15 ஆம் தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தைக்காக வக்கீல்கள் பரமத்தி வேலூர் ராமலிங்கம், திருச்செங்கோடு பாலசுப்ரமணியம், நாமக்கல் அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளி குமா,ர் அந்தோணி புஷ்பதாஸ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மத்தியஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே 10 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்காத நபர்களை கைது செய்யக் கோரி உத்தரவிட்ட வழக்குகளில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட கைது வாரண்டின் நிலை என்ன என அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி டாக்டர் ராமராஜ் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 72 -படி நுகர்வோர் கோர்ட் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க நுகர்வோர் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 3 வாரங்களுக்கு முன்னர் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூபாய் 55 ஆயிரத்துக்கான காசோலையை சம்மந்தப்பட்ட நுகர்வோருக்கு நீதிபதி டாக்டர் ராமராஜ் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu