மேகாதாதுவில் அணை: கர்நாடகா துணை முதல்வர் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு

நாமக்கல்லில், தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் செல்ல ராஜாமணி பேட்டியளித்தார்.
கர்நாடகாவில், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால், அம்மாநில துணை முதல்வரின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் முன்னேறக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் செல்ல ராஜாமணி, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகா மாநிலத்தில், மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டினால், காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், தமிழகத்தில் காவிரி ஆற்றை நம்பி உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும். எனவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மத்திய அரசும், பசுமைத் தீர்ப்பாயமும் மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது கர்நாடகா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், மாநில துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அதிகாரிகளை அழைத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளர். இந்த அறிவிப்பு கர்நாடகா - தமிழக சுமூக உறவை சீர்குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையிலும் உள்ளது. மேலும் இந்த அறிவிப்பினால், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மிகவும் பதட்டத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, மத்திய அரசுடனும், கர்நாடகா அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகாதாதுவில் அணை கட்டும் முயற்சியைக் கைவிடாவிட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய இயக்கங்களையும் ஒன்றிணைத்து, கர்நாடகாவில் உள்ள துணை முதல்வர் சிவகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் கூறினார். பேட்டியின்போது விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu