திருச்செங்கோடு நகராட்சி மேம்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட் திறப்பு விழா
திருச்செங்கோடு நகராட்சி மேம்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட்டை மாவட்ட ஆட்சியர் உமா, எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருச்செங்கோடு நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட், ரூ. 4.72 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா எம்எல்ஏ ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உமா மேம்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட்டை திறந்து வைத்துப் பேசியதாவது:
திருச்செங்கோடு நகராட்சி தினசரி மார்க்கெட் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இங்கு வியாபாரிகள் தங்களின் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய பிளாட்பாரம் வசதி இல்லாமலும், பழுதடைந்த மேற்கூரையில் அமர்ந்தும், வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாமல் வியாபாரம் செய்து வந்தனர். இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம், ரூ.4.72 கோடி மதிப்பீட்டில், 23,134 சதுர அடி பரப்பளவில் 173 பிளாட்பார கடைகளில் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் மேற்கூரை வசதி, மின்விளக்கு வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளுடன் கூடிய புதிய தினசரி சந்தை வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்கள் சிரமமின்றி சந்தையில் சென்று வர சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி சந்தையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புதியதாக 52 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக தெற்கு பகுதியில் கான்கீரிட் தளம் அமைத்து இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தினசரி சந்தைக்கு வாகனங்களில் வரும் பொருட்களை எளிதில் இறக்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டத்தினால் தினசரி மார்க்கெட் சுற்றி உள்ள நகர்பகுதி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 1,30,000 பேர் பயனடைவார்கள் என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நளினி சுரேஷ்பாபு, கவுன்சிலர்கள் மனோன்மணி, சரவணன், நகராட்சி ஆணையாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu