கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால்மின் தடை செய்ய நேரிடும்: விவசாயிகள் எச்சரிக்கை
கர்நாடக அரசு காவிரி நீரை தர மறுத்தால் தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்
HIGHLIGHTS

விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி.
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தர தவறினால், நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு, கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை தடை செய்வோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, காவிரி பங்கீட்டு நீரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது. எனவே மத்திய அரசு தனது கண்காணிப்பில் உள்ள துணை ராணுவத்தின் உதவியோடு தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக அரசு காவிரி நீரை வழங்கத் தவறினால், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை தடை செய்வோம். மேலும் சேலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் ரயில்களை மறித்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.