கள்ளுக்கடைகளை திறக்கக்கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட முயன்ற விவசாயிகள் கைது..!
கள்ளுக்கடைகளை திறக்கக்கோரி, நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு, பூட்டுப்போடுவதற்காக விவசாயிகள் சங்கத்தினர் கையில் பூட்டுகளுடன் பேரணியாக வந்தனர்.
நாமக்கல்,
தமிழகத்தில் கள்ளுக்டைகளை திறக்க கோரி, அரசு மதுக்கடைக்கு பூட்டுப்போட வந்த விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் தென்னை வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தென்னை மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து, தேங்காய் உற்பத்தி பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் தேங்காய் விலை சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கள் இறக்க அனுமதி அளித்தால், தென்னை மரம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.
எனவே தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்கக் கோரி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை விவசாய சங்கம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் நாமக்கல் அருகே தென்னை மரத்தில் கள் கட்டும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்க அனுமதி அளிக்க கோரி, நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இன்று பகல் 12.30 மணிக்கு, விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் பூட்டுடன், கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு, நாமக்கல் மினி பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கு பூட்டுப்போட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு பஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாக போராட்டம் முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu