நாமக்கல் பகுதியில் 5 வழித்தடங்களில் பஸ் வசதி; துவக்கி வைத்த அமைச்சர்

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், 5 வழித்தடங்களில் பஸ் வசதியை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆட்சியர் உமா, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.
Namakkal news, Namakkal news today- நாமக்கல் பகுதியில் 5 புதிய வழித்தடங்களில் பஸ் வசதியை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
நாமக்கல் தெற்கு ஆர்டிஓ அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி. சின்ராஜ், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, 3 டவுன் பஸ்கள் மற்றும் 2 புறநகர் பஸ்களை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மாநில நிதியிலிருந்து 2,000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டு, முதற்கட்டமாக தற்போது 250 க்கும் மேற்பட்ட பஸ்களை செயல்பாட்டிற்கு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் விடப்படுகின்றன.
இன்று பரமத்தி வேலூர்-பொன்மலர்பாளையம் வழித்தடத்தில் 1 டவுன் பஸ், ராசிபுரம் பஸ் நிலையத்திலிருந்து ஆண்டகளுர் கேட், பாச்சல் பிரிவு நத்தமேடு சிங்காளந்தபுரம் வழித்தடத்தில் 1 டவுன் பஸ் என 2 டவுன் பஸ்களும், ராசிபுரம் பஸ் நிலையத்திலிருந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம் கோவை வழித்தடத்திற்கு 1 புறநகர் பஸ்சும், மோகனூர் பஸ் நிலையத்திலிருந்து நாமக்கல், துறையூர், விழுப்புரம் கிளாம்பாக்கம் வழித்தடத்திற்கு 1 புறநகர் பஸ்சும், நாமக்கல் பஸ் நிலையத்திலிருந்து சேலம், ஆத்தூர், சிதம்பரம் மயிலாடுதுறை வழித்தடத்திற்கு 1 புறநகர் பஸ்சும் என இன்று 5 புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஜெர்மன் வங்கி நிதியுதவியோடு 2,200 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் 15 ஆண்டுகளாக உள்ள பஸ்களுக்கு மாற்றாக 8 மாதத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளது. லாரி உரியைமயாளர் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதனை நிறைவேற்ற உறுதுணையாக இந்த அரசு இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் குறைந்துள்ளது.
மேலும், சாலை விபத்துகளை குறைப்பதற்காக, போக்குவரத்து துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்காக ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை பின்பற்றி விபத்து இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu