பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தபால் அலுவலகங்களில் வங்கி கணக்கு

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தபால் அலுவலகங்களில் வங்கி கணக்கு
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தபால் அலுவலகங்களில் வங்கி கணக்கு துவக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தபால் அலுவலகங்களில் வங்கி கணக்குகள் துவக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் ஆன்லைன் மூலமாக மாணவர்களின் விபரங்கள் பள்ளி கல்வி துறை மூலமாக பாராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கும்போது வங்கியில் மாணவர்களது கை ரேகை பதிவு செய்து, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அல்லது பெற்றோரது செல்போன் எண் தெரிவிக்கப்பட்டு அதில் வரும் ஓடிபி அடிப்படையில், வங்கி கணக்குடன் ஆதார் சீடிங் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில், சுமார் 8,860 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது, கடந்த 12 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2,443 மாணாக்கர்களுக்கு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,417 மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்கள் / தபால்காரர் / கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி கல்வி உதவித்தொகை பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
the future with ai