வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.
படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜன.1ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், ஒரு ஆண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றவர்களைப் பொறுத்தவரை 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருக்கக் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும் மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.
தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் கொண்டுவர வேண்டும்.
மேலும் tnvelaivaippu.gov.in என்ற இணையதளத்திலும், விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் 7ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வர வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகள் மட்டும் வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu