காவிரி ஆற்றில் நீராட தடை விதித்ததால் ஆடிப்பெருக்கு நாளில் களையிழிந்த காவிரி..!

பரமத்திவேலூரில் காவிரி ஆற்றுப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், ஆடிப்பெருக்கு பண்டிகைக்காக முளைப்பாரியை எடுத்து வந்த பெண்கள், காவிரி பாலத்தின் மேல் இருந்து, முளைப்பாரிகைøயை ஆற்றில் விட்டு வணங்கி சென்றனர்.
காவிரி ஆற்றில் நீராட தடை விதித்ததால் ஆடிப்பெருக்கு நாளில் களையிழிந்த காவிரி
நாமக்கல்,
காவிரியில் கரைபுரண்டு வந்த வெள்ளத்தால், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் காவிரி ஆற்றுப்பக்கம் செல்லவோ குளிக்கவே அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோரப் பகுதிகளில் களையிழந்து காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையம், குரும்பல மகாதேவி, ஜமீன்இளம்பள்ளி, அரசம்பாளையம், கொத்தமங்கலம், ஜேடர்பாளையம் தடுப்பணை, ஜேடர்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிபாளையம், ஆனங்கூர் சங்கிலி கருப்பணசாமி கோயில் காவிரி கரை, அய்யம்பாளையம் பரிசல்துறை, பிலிக்கல் பாளையம் பரிசல் துறை, சின்னாகவுண்டன் பாளையம், சாணார்பாளையம், பொன்மலர் பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, கொமராபாளையம், மோகனூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் ஆடி 18 பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் இங்குள்ள காவிரி ஆற்றுப் பகுதிக்கு அதிகாலையே வந்திருந்து புனித நீராடி, புதுமணத் தம்பதிகள் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும், அதனை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து முளப்பாரியை காவிரி ஆற்று தண்ணீரில் விட்டு, படையல் போட்டு படைக்கும் நிகழ்ச்சியும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
இந்நிலையில் தற்போது, காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆகியோர் ஆடி 18 பண்டிகை மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டும் மற்றும் தண்ணீர் வரத்து குறையும் வரை காவிரி ஆற்றில் குளிக்கவும், ஆற்றுப்பகுதிக்கு செல்லவும் தடைவிதித்துள்ளனர். இதன் காரணமாக காவிரி ஆற்றுக்கு செல்லும் வழித்தடங்கள் அனைத்திலும் இரும்பு தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்று பக்கம் செல்லாதவாறு அனைத்து பகுதிகளிலும் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆடிப்பெருக்கு நாளில் பொதுமக்களின் கூட்டம் களைகட்டி இருக்கும் காவிரிக்கரை களையிழந்து காணப்பட்டது.
கடும் கட்டுப்பாட்டின் காரனமாக, பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராட முடியாமலும், சுவாமி தரிசனம் செய்து முளைப்பாறியை காவிரி ஆற்று தண்ணீரில் விட முடியாமலும் அவதிப்பட்டனர். பல பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இருப்பினும் தங்கள் வீடுகளில் ஏற்கனவே போட்டு வைத்ள்ள முளைப்பாரியை காவிரி ஆற்று தண்ணீரில் விட முடியாமல் அவதிப்பட்டனர். சிலர் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள் மற்றும் கிணற்று தண்ணீரில் முளைப்பாரியை விட்டு தரிசனம் செய்தனர்.
பரமத்திவேலூர் மற்றும் மோகனூர் பகுதியில், காவிரியாற்றில் விடுவதற்காக முளைப்பாறிகளை எடுத்து வந்த பல பொதுமக்கள் ஆற்றுப் பாலத்தின் மேல் இருந்து இருந்து காவிரி ஆற்றுக்குள் முளைப்பாறிகளை விட்டு காவிரி தாயை வணங்கிச் சென்றனர். கடந்த வாரம் வரை காவிரியில் தண்ணீர் இல்லை, எவ்வாறு ஆடிப்பெருக்கு நாளில் புனித நீராட முடியும் என ஏங்கி இருந்து பொதுமக்கள் காவிரி கரைபுரண்டு வந்த நிலையில், போலீஸ் கெடுபிடி காரனமாக புனித நீராட முடியாமல் அதிருப்தியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu