நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் 1,628 வாக்குச்சாவடிகள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
நாமக்கல் மாவட்டத்தில், இன்று வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளனர், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் என, 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அருகில், யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 692 வாக்குப்பதிவு மையங்களில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு, வாக்குசாவடிகளில் பயன்படுத்துவதற்காக தேர்தல் கமிஷன் மூலம் 5,665 எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,301 வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களும் ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருட்களும், சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்குள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 174 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு நுன் பார்வையாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 1060 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஓட்டுப்போடுவதற்கு தேவையான அடையாள ஆவணங்கள்:
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 19ம் தேதி, ஓட்டுப்போடுவதற்காக, ஓட்டுச்சாவடிக்கு செல்லும், வாக்காளர்கள் அனைவரும், தேர்தல் அலுவலர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பை எடுத்துச்செல்லவேண்டும். மேலும், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். வாக்காளர் புகைப்பட அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க தேர்தல் கமிஷன் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட 12 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடி மையத்தில் அளிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய பேங்க் மற்றும் தபால் அலுவலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு,
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், எம்.பி., எம்எல்ஏ மற்றும் எம்ல்சிக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை. இவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
ஆட்சியர் வேண்டுகோள் :
நாமக்கல் லோக்சபா தொகுதியில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அச்சமின்றி வாக்களிக்கலாம். தகுதியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu