அந்தியூரில் அதிகாலையில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய பெண் கைது

அந்தியூரில் அதிகாலையில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய பெண் கைது
X

கைது செய்யப்பட்ட சுமதி.

அந்தியூரில் இன்று அதிகாலையில் ஏணியை வீட்டின் சுவர் மீது போட்டு வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணம் திருடிய பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேட்டைபெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பூபதி (40) வாகன உதிரி பாக கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு பூபதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு பூபதி மற்றும் அவரது மனைவி ஷாலினி, தாயார் ரத்தினம், மகன் ஆதிக் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் பூபதியின் தாயார் இரத்தினம் வீட்டில் விளக்கு எரிவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் எழுந்து சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அங்கு ஒரு பெண் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது நண்பர்கள் உதவியுடன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் அந்தியூர் மீனவர் வீதியை சேர்ந்த சுமதி (40) என்பதும், இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஏணியை பூபதி வீட்டின் சுவற்றின் மேலே வைத்து ஏறி வீட்டுக்குள் குதித்து வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு சேலையில் மறைத்து வெளியே செல்ல முயன்ற‌ போது மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். இதை தொடர்ந்து இந்த திருட்டில் சுமதி மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil