கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு..!
பவானிசாகர் அணை (பைல் படம்).
பவானிசாகர் அணையில் இருந்து, முதல் போக நன்செய் பாசனத்துக்கு, கடந்த 19ம் தேதி காலை 11 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த 20ம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரில் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகவும், நேற்று முன்தினம் மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த 24ம் தேதி மாலை 4 மணிக்கு வினாடிக்கு 1,800 கன அடியாகவும், நேற்று (26ம் தேதி) வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 80.90 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 864 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடி நீரும், காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீர்வரத்தைவிட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது, 80 அடியாக குறைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu