அந்தியூர் அருகே குட்டையூர் மலைக்கிராமத்தில் இரு மாநில எம்எல்ஏக்கள் நேரில் ஆய்வு

அந்தியூர் அருகே குட்டையூர் மலைக்கிராமத்தில் இரு மாநில எம்எல்ஏக்கள் நேரில் ஆய்வு
X

தமிழக - கர்நாடக மாநில அதிகாரிகளையும் வைத்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் , ஹனூர் எம்எல்ஏ மஞ்சுநாத் ஆகியோர் கேட்டறிந்தார்.

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள குட்டையூர் பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து, இருமாநில எம்எல்ஏக்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள குட்டையூர் பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து, இருமாநில எம்எல்ஏக்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த மலை கிராமங்களில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. பர்கூர் மலைப்பகுதியானது, கர்நாடக எல்லையை ஒட்டி உள்ளது. தமிழ்நாடு- கர்நாடக எல்லையை பிரிக்கும் பாலாற்றின் அருகே தமிழக வனப்பகுதிக்குள் குட்டையூர், மட்டிமரத்தள்ளி மற்றும் வேலம்பட்டி ஆகிய 3 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.


குறிப்பாக, கடைக்கோடியில் உள்ள குட்டையூர் மலை கிராமத்தில் இருந்து மருத்துவ தேவைக்கும், அரசு சார்ந்து பணிகளுக்கும் இவர்கள் பாலாற்றை கடந்து கர்நாடகவிற்குள் சுமார் 50 கிமீ பயணித்து தமிழக பகுதிக்கு வந்து, அங்கிருந்து சுமார் 60 கிமீ பயணம் என மொத்தம்‌ 110 கி.மீ தூரம் பயனித்து அந்தியூர் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், இம்மலை கிராமத்தில் உடல் நலக்குறைவு ஏற்படும் மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத நிலையும், அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பாலாற்றில் தண்ணீர் வந்து விட்டால் அங்குள்ள மக்கள் எங்குமே செல்ல முடியாது, ‌ கிராமம் தனித்து விடப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.


இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தங்களுக்கு சாலை வசதி வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலத்திடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த மாதம் 22ம் தேதி காலை ஆலசொப்பனட்டி கிராமத்திற்கு சென்ற எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம், அங்கிருந்து 10க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களோடு வனத்திற்குள் கரடு முரடான பாதையில் சுமார் 10 கிமீ தூரம் நடந்து சென்றார். பின்னர், அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கர்நாடகா வழியாக குட்டையூர் மக்கள் தங்களின் வீட்டு தேவைக்கான பொருட்கள்,‌ கட்டிடம் கட்டுவதற்கு உண்டான பொருட்களை எடுத்து வரும்போது கர்நாடக வனத்துறையினர் அனுமதி மறுப்பதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.


அதனைத்தொடர்ந்து, குட்டையூர் பழங்குடியின மக்களின் கோரிக்ககைகள் குறித்து வனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடமும் எம்எல்ஏ வெங்கடாசலம் பேசி இருந்தார். இதற்கிடையே கர்நாடக வனத்துறை அனுமதி பெறுவது தொடர்பாக கர்நாடக மாநிலம், ஹனூர் தொகுதி எம்எல்ஏ மஞ்சுநாத்தை தொடர்பு கொண்ட அந்தியூர் எம்எல்ஏ அப்பகுதி மக்களின் பிரச்சினை குறித்து பேசி இருந்தார். தொடர்ந்து நானே நேரடியாக தங்களின் கிராமத்திற்கு வருவதாகவும், அப்போது தன்னுடன் மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் அழைத்து வருவதாகவும் கர்நாடக மாநில எம்எல்ஏ உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, ஹனூர் எம்எல்ஏ மஞ்சுநாத், மலை மாதேஸ்வர வன கோட்ட அலுவலர் சந்தோஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு நேற்று (நவ.6) திங்கட்கிழமை கர்நாடக மாநில எல்லை கிராமமான ஜல்லிபாளையத்திற்கு வந்தார். அப்போது அங்கு அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் சுதாகர் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.


தொடர்ந்து, இருமாநில எம்எல்ஏக்களும் மற்றும் இரு மாநில அரசு அதிகாரிகளும் பாலாற்றை கடந்து கிராமத்திற்கு வந்தனர். பின்னர், குட்டையூர் பழங்குடியின கிராமத்திற்கு வந்த எம்எல்ஏக்கள் இருவரையும் அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் வரவேற்றனர். இருமாநில அதிகாரிகளையும் வைத்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏக்கள், ‌ தொடர்ந்து அதிகாரிகளிடம் எங்களின் முன்னெடுப்புகளுக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகளிடமும் எம்எல்ஏக்கள் கேட்டுக் கொண்டனர். தமிழக கடைக் கோடி கிராமத்தில் இரு மாநில எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அமர்ந்து பேசி இருப்பது இதுவே முதல் முறை இது குட்டையூர் கிராம மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!