கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல முடிவு
கூட்டத்தை விட்டு விலகி வந்த குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து மற்றோரு கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாய் யானை மயங்கி விழுந்து உயிருக்கு போராடியது. அப்போது அதன் அருகில் 2 மாத குட்டி யானை பரிதவித்தப்படி சுற்றி, சுற்றி வந்தது. வனத்துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி தாய் யானை 5ம் தேதி உயிரிழந்தது. அதன் 2 மாத குட்டி யானை அங்குள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதையடுத்து குட்டி யானையின் நடமாட்டத்தை டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.
பின்னர், மறுநாள் மற்றொரு யானைக்கூட்டத்துடன், அந்த குட்டி யானை சென்றது. இந்த நிலையில், தாய்ப்பால் குடித்து பழக்கப்பட்ட அந்த குட்டி யானைக்கு மற்றொரு யானை தாய்ப்பால் கொடுக்காததால் கூட்டத்தை விட்டு குட்டி யானை விலகி வெளியேறியதாக தெரிகிறது. இதனால் குட்டி யானை அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்ததுடன், வழித்தவறி வனப்பகுதியை விட்டு வெளியேறி தாளவாடி அருகே உள்ள அரேப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆசனூர் வனத்துறையினர் குட்டி யானையை பிடித்து வாகனத்தில் ஏற்றி ஆசனூர் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர். குட்டி யானைக்கு தேவையான பால் மற்றும் உணவுகள் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதுமலை யானைகள் முகாமுக்கு குட்டி யானையை கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, குட்டி யானையை பராமரிப்பது குறித்து ஆலோசனை நடத்தியதில், குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஓரிரு நாட்களில் பாதுகாப்பாக குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்லப்படும், என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu