2வது நாளாக தொடரும் போராட்டம்: ஈரோடு மண்டலத்தில் 70 சதவீத பேருந்துகள் இயக்கம்..!
ஈரோடு பணிமனையில் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.
2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு மண்டலத்தில் இருந்து 70 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு ஏற்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 24 தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையே தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் மூன்றாம் கட்ட சமரச பேச்சு நேற்று முன்தினம் நடந்தது. முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். எனினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். அதே சமயம் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஈரோடு மண்டலத்தை பொருத்தவரை ஈரோடு, பெருந்துறை , அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி உள்பட 13 பணிமனைகளில் 700க்கும் மேற்பட்ட தொலைதூர பேருந்துகள், நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பேருந்துகள் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நேற்றிலிருந்து ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஈரோடு பணிமனையில் இன்றும் இரண்டாவது நாளாக இயங்க தொடங்கின. அப்போது மற்ற தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மற்ற தொழிற்சங்கத்தினர் பணிமனை அருகே கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து ஈரோடு பணிமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு வழக்கும் போல் பேருந்துகள் இயங்க தொடங்கின. குறிப்பாக சேலம் திருப்பூர் கோவை மதுரை போன்ற பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின. இதேபோல் நகர பேருந்துகளும் பெரும்பாலும் இயங்கின. அதேபோல் தனியார் பேருந்துகளும் இன்று வழக்கத்தை விட கூடுதலாக இயக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu