அந்தியூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16.50 லட்சம் மோசடி
பைல் படம்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த சிந்தகவுண்டன்பாளையம், அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (32). இவர் அரசு வேலை தேடி வந்தார். இவரின் நண்பர் பூபதி மூலம் ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் தனது கல்லூரி நண்பரான ராஜேஷ் குமார் என்பவரை அங்க முத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் ராஜேஷ்குமார் தான் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் பெரிய பதவியில் இருப்பதாகவும், என்னால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தர முடியும் என்று அங்கமுத்துவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அங்கமுத்து கடந்த ஆண்டு 28.8.2021 முதல் 2.9.21 வரை உள்ள காலகட்டத்தில் அந்தியூரில் உள்ள தனியார் வங்கிகள் மூலம் ராஜேஷ்குமார் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணையாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் ராஜேஷ்குமார் கூறியபடி அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அங்கமுத்து சென்னை உள்ள தலைமை செயலத்திற்கு சென்று விசாரித்த போது ராஜேஷ்குமார் அங்கு வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அங்கமுத்து ராஜேஷ்குமார் மற்றும் குருதேவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் 2 பேரும் போனை எடுக்கவில்லை. மீண்டும் அங்கமுத்து அவர்களுக்கு போன் செய்த போது அவர்கள் தங்களை நேரிலோ அல்லது போன் மூலமோ தொடர்பு கொண்டால் என மிரட்டி உள்ளனர். இதையடுத்து அங்கமுத்து இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தியூர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குருதேவ் மற்றும் ராஜேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu