வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவில் சாலை மறியல்
பவானியில் அந்தியூர் -மேட்டூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட பொதுமக்களை படத்தில் காணலாம்.
பவானியில் ஆற்றங்கரையோர வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பவானி அந்தியூர் பிரிவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி பழைய பேருந்து நிலையம் முதல் தொடங்கி பண்டார அப்பிச்சி கோயில் வரையில் பவானி ஆற்றின் கரையோரம் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, வருவாய் துறையினர், பேரிடர் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை இந்நாள் வரை வழங்கி பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், பவானி பழைய பேருந்து நிலையம் தொடங்கி பண்டார அப்பிச்சி கோயில் வரையில் பவானி ஆற்றங்கரை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் என 133 கட்டடங்கள் நீர்வளத்துறையினரின் ஆய்வில் கண்டறியப்பட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை செப்டம்பர் 18ம் தேதிக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
முதல் கட்டமாக ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்புகளை துண்டிக்க மின்வாரியத் துறையினருக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், பழனிபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்று (5ம் தேதி) காலை அந்தியூர் பிரிவில் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட காலமாக வசித்து வரும் தங்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தினர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அந்தியூர்-மேட்டூர் பிரிவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன், பவானி டிஎஸ்பி சந்திரசேகரன், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, மயிலம்பாடி பகுதிக்கு தங்களால் செல்ல முடியாது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். இதே பகுதியில் குடியிருக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். தற்போது திடீரென நோட்டீஸ் வழங்கி வீடுகளை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே நாங்கள் இங்கிருந்து காலி செய்ய இயலாது. எங்களிடம் உள்ள ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவையும் ஒப்படைக்க தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போதும், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அங்கும் சென்ற பொதுமக்கள் வாகனங்களை வழிமறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் போராட்டத்தால் பவானி நகரில் இன்று காலை பரபரப்பான சூழல் நிலவியது.
தொடர்ந்து, அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தை முன் நின்று நடத்திய 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து வாகனங்களை வரிசையாக அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
பொதுமக்கள் சிறிது நேரம் அங்கேயே இருந்து விட்டு பின்னர், அவர்கள் பவானி வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு, அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி தான் ஆக வேண்டும். நிரந்தரமாக ஆற்றங்கரையோரம் இருக்க முடியாது. தற்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டுமானல் வழங்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து, அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu