கொடுமுடியில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

கொடுமுடியில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
X

கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்த்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், அனைத்துத் துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் சாராம்சம் குறித்து, அலுவலர்களுடன் விவாதித்தார். மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

மேலும், துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் அங்கன்வாடி மையத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் வசதிகள், நியாய விலை கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்து திட்டம் செயல்படுவது குறித்தும், பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஏதேனும் குறைகள் இருப்பின் உரிய அலுவலர்கள் மூலம் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் காலாவதி விபரம், மருந்துகள் சேமிக்கும் விதம் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மயானத்திற்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


அதனைத் தொடர்ந்து, கொடுமுடி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மையாக பராமரிக்கவும், கழிவறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சாலைப்புதூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கொடுமுடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பருத்தி கொட்டாம்பாளையம் பகுதியில் தெருவிளக்குகளை ஆய்வு செய்தார். முன்னதாக, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஸ்குமார், கொடுமுடி வட்டாட்சியர் பாலகுமார் உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story