ஈரோட்டில் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழங்குற்றவாளி மீட்பு

கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த செல்வனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள 80 அடி உயர கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழங்குற்றவாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் பயண சீட்டு முன்பதிவு செய்யும் கட்டிடமும், ரயில் ஓட்டுநர்கள் அலுவலகமும் உள்ளது. இந்த அலுவலகம் அருகே 80 அடி உயர கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று) சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தற்கொலை செய்து கொள்வதாக கூறி கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறினார்.
பின்னர், 80 அடி உயர கோபுரத்தில், 60 அடி உயரத்தில் உள்ள தடுப்பு பலகையில் படுத்து விட்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கும், ஈரோடு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கோபுரத்தில் மீது ஏறி, கோபுரத்தில் படுத்து இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், 30 நிமிடம் போராடி அவரை சமாதானம் செய்து கீழே இறக்கி, ஈரோடு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவேரி ரயில்வே நிலைய பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 42) என்பதும், ஈரோடு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருட்டு போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட பழங்குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சூரம்பட்டி பகுதியில் நடந்த திருட்டு வழக்கு குறித்தும், கூட்டாளிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் மதுபோதையில் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசார், செல்வனை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கோபுரத்தில், கடந்த மாதம் வடஇந்திய வாலிபர் ஏறி மிரட்டல் விடுத்ததும், தற்போது மதுபோதையில் செல்வம் இதே கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இரண்டு சம்பவத்தால் இந்த கோபுரத்தை பாதுகாக்க தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu