ஈரோடு மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு முன்பதிவு செய்ய அழைப்பு..!
கொப்பரை தேங்காய் (கோப்புப் படம்).
ஈரோடு மாவட்டத்தில் நாபெட் மூலமாக கொப்பரை கொள்முதலுக்கு விவசாயிகள் வருகின்ற 26ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு வேளாண் விற்பனைக் குழு துணை இயக்குநர் சாவித்ரி கூறியதாவது:-
மத்திய அரசின் நாபெட் மூலம் குறிப்பிட்ட தரத்துடன் 40,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயித்தது. அதில், 5,060 டன் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கொள்முதல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே, 746 டன்னுக்கு முன்பதிவு செய்து, கொள்முதல் முடிந்துவிட்டது. கடந்த 26ம் தேதி மீண்டும் முன்பதிவுக்கான போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் கொள்முதல் செய்யப்படும்.
கொப்பரை வைத்திருப்போர் பதிவு செய்து விட்டு, விற்பனைக்கு தரமான கொப்பரையை தயார் செய்து எடுத்து வரலாம். சரியான ஈரப்பதம், குறைவான சுருக்கம், கலவன்கள் இன்றி கொப்பரை தேங்காய் இருக்க வேண்டும். முதல் தரத்தில் உள்ள கொப்பரையை நாபெட் கொள்முதல் செய்யும். அடுத்த தரத்தில் உள்ளவற்றை, அதே வளாகத்தில், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உரிய விலைக்கு விற்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். கொப்பரைத் தேங்காய்க்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu