போதைப்பொருள் விற்பனையைத் தடுத்த மகன் கொலை: ஈரோடு எஸ்பியிடம் தாயார் புகார் மனு

ராஜாத்தி, அவரது உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் இணைந்து ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
போதைப் பொருள் விற்பனையைத் தடுத்ததால் தான் மகன் கொலை செய்யப்பட்டதாக இளைஞரின் தாயார் ஈரோடு எஸ்பியிடம் புகாா் மனு அளித்துள்ளார்.
ஈரோடு மரப்பாலம், நேதாஜி சாலை, ஆலமரத்து தெருவை சேர்ந்த பூபதி என்பவரது மனைவி ராஜாத்தி (வயது 42) , அவரது உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி அமைப்பின் நிர்வாகிகள் இணைந்து ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு, விஜயலட்மி என்ற மகளும், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, வீராசாமி, அர்ஜூன் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். கடந்த 9ம் தேதி இரவு 8 மணியளவில், நடராஜா தியேட்டர் பின்புறம் உள்ள பெரும்பள்ளம் ஓடையில், தலையில் பலத்த காயத்துடன் எனது மூத்த மகன் மணிகண்டன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு போலீசார், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது மணிகண்டன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், ஈரோடு டவுன் போலீசார், எனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர். மணிகண்டனின் முதல் மனைவி அவருடன் இல்லாததால், காரைவாய்க்கலை சேர்ந்த துர்கா என்பவருடன் அவர் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை அதிகமாக நடந்ததை, மணிகண்டன் கண்டித்தார். மேலும், விற்பனை செய்பவர்களை தடுத்தும் வந்தார்.
இதனால், போதை பொருட்கள் விற்பனை செய்வோருடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அவர் இறந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது சாவில் மர்மம் உள்ளது. எனவே, அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu