சித்தோடு அருகே பேரோட்டில் கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர்..!
பேரோடு பகுதியில், கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய அமைச்சர் முத்துசாமி.
சித்தோடு அருகே பேரோடு பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தோடு அடுத்த பேரோடு பகுதியில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செவ்வாய்க்கிழமை (இன்று) திறந்து வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரோடு பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செயல்பட்டு வந்த கால்நடை கிளை நிலையமானது, கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது, ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கும் வகையில் கால்நடை மருந்தகத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, பேரோடு, கம்புளியாம்பட்டி, கரட்டுப்பாளையம், குருநாதர் புதூர், குட்டை தயிர்பாளையம், குருசாமிபாளையம், செல்லப்பம்பாளையம், சக்திநகர், மேட்டுப்பாளையம், சுத்துக்கரடு, ஜே.ஜே.நகர், நொச்சிபாளையம், நொச்சிபாளையம் புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, கோழி, நாய் உள்ளிட்ட 14,750 கால்நடைகள் பயன்பெறும், என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரகாஷ், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பழனிச்சாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், உதவி இயக்குநர் சேகர் உட்பட கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu