மாதவிடாய் சுகாதாரம் பேசும் காமிக் புத்தகம்: ஈரோடு மாவட்ட மாணவிகளுக்கு விநியோகம்..!
மென்ஸ்ட்ரூபீடியா காமிக்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 175 அரசு பள்ளி மாணவிகளுக்கு மென்ஸ்ட்ரூபீடியா காமிக் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மென்ஸ்ட்ரூபீடியா இணைந்து மென்ஸ்ட்ரூபீடியா காமிக் புத்தகங்கள் (25 ஆயிரம்) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 175 அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மென்ஸ்ட்ரூபீடியா காமிக் என்பது இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு சிறிய காமிக் புத்தகம். ஒவ்வொரு மாணவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வழிகாட்டி கையேடு. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் பருவ வயது பெண்களுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் குறித்து விளக்கிக் கூறும் ஓர் நட்பான வழிகாட்டி.
மேலும், மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்க்கவும் பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கையேடு பயன்படும். மேலும், இப்புத்தகங்களை நூலகத்தில் வைத்து பராமரித்து மாணவியர்களுக்கு படிப்பதற்கு வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் குறித்த நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் கையேடுகளை பள்ளி மாணவியர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu