ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடிட்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடிட்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழாவில் எடுக்கப்பட்ட படம்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடிட்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க விழா இன்று (1ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வெராண்டா நிறுவனம் இணைந்து நடத்தும் சார்ட்டட் அக்கௌன்டன்ட் தேர்வுக்கான அடிப்படை பாட வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று (1ம் தேதி) நடைபெற்றது.
இவ்விழாவில், ஜே.கே.ஷா நிறுவனத்தின் பேராசிரியர் மொய்தீன் அப்துல் காதர் கலந்து கொண்டு துவக்கவுரை ஆற்றினார். அவர் பேசியதாவது, இந்தியாவை பொருத்தவரை மாணவர்களிடையே ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற கனவு இன்று அதிகரித்து உள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதாரம், தொழில் முன்னேற்றங்கள், உலகமையமாக்கல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். இன்றைய சூழலில் ஆறு லட்சம் ஆடிட்டர்களுக்கு தேவை உள்ளது, ஆனால் சுமார் இரண்டு லட்சம் ஆடிட்டர்களே உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் பலர் சார்ட்டட் அக்கௌன்டன்ட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றார்.
விழாவிற்கு, கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். பின்னர், கல்லூரி முதல்வர் வாசுதேவன் அவர்கள் பேசுகையில், பெருநகரங்களில் கிடைக்கும் இது போன்ற ஆடிட்டர் படிப்பிற்கான வகுப்புகளை நமது மாணவர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், இவ்வகுப்பில் சேர்ந்துள்ள அனைத்து மாணவர்களின் ஆடிட்டர் கனவு நனவாக கல்லூரி அனைத்து உதவிகளையும் செய்யும். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளம் இட்டுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து, விழாவில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. வருங்கால ஆடிட்டர் நான் என்கிற உறுதியுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu