கல்வி உதவித்தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
கல்வி உதவித்தொகை.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்விக்கான உதவித்தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவியர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிகணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை இஎம்ஐஎஸ் (கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம்) emis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதிய கட்டடம் 4-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2260155, 75986 83121 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu